Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Saturday, 11 October 2014

அரசு பள்ளிகளில் 'தூய்மை' :

அரசு பள்ளிகளில் 'தூய்மை' : ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

"பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அக்.2ல் 'கிளீன் இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார். மோடியின் இத்திட்டம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
'தூய்மை பள்ளி' திட்டம்: இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில், அக்.,9 முதல் 2015 ஆக.,15 வரை 'தூய்மை பள்ளி' திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். அதில், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தை சுத்தமாக வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்களை அகற்ற வேண்டும். பள்ளி குடிநீர் தொட்டியில் 'குளோரினேஷன்' செய்ய வேண்டும். சத்துணவு மையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடல் வேண்டும். தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றில் ஒட்டடை அடித்து தூய்மையாக வைக்க வேண்டும். பள்ளி வளாக கதவுகள், ஜன்னல்கள், பேன், நாற்காலிகள், மாணவர் இருக்கைகள், அலமாரி, கம்ப்யூட்டர், டிவி.,க்கள், லேப்-டாப் போன்றவற்றில் படிகிற தூசிகளை அன்றாடம் துடைத்து, தூய்மையாக வைத்திடல் வேண்டும். பள்ளி கட்டடங்களை பழுதுபார்த்து, வெள்ளை அடிக்கவேண்டும்.
விழிப்புணர்வு: மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு தர வேண்டும். தினமும் நடக்கும் காலை வழிபாட்டில் மகாத்மா காந்தியின் சுத்தம், சுகாதாரம் சார்ந்த கூற்றுக்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவியம், தனிநடிப்பு போட்டிகள் நடத்தி, 'தூய்மையான பள்ளி' என, அறிய செய்தல் வேண்டும். மேலும், தினமும் மாணவர்கள் பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், சுத்தமான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன் சோப்பால் கை கழுவுதல் குறித்து பயிற்சி அளிக்கவேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலம், அந்தந்த பள்ளிகளை, 'தூய்மை பள்ளி'களாக வைத்திருக்கவேண்டும், என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.