ஆசிரியர்களின் பணிகளை கண்காணிக்க உத்தரவு
பள்ளி ஆசிரியர்களின் பணிகளை வாரம் 2 முறை கண்காணித்து, தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாடத்திட்டம் செயல்படுத்துதல், பள்ளியின் வளர்ச்சி, பராமரிப்பு, சமூக நல்லிணக்கம், ஆசிரியர் ஒற்றுமை ஆகியவற்றுக்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து ஆசிரியர்களும் தினமும் வேலை செய்த விவரத்தை பதிவேட்டில் கண்டிப்பாக எழுத வேண்டும். பொதுவாக தமிழ், ஆங்கிலம் கணிதம் என்று எழுதக்கூடாது. குறிப்பிட்ட பாட வேளையில் அந்த ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு என்ன கற்பித்தார் என்பதை சுருக்கமாக எழுத வேண்டும். 5 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் கண்டிப்பாக பாடக் குறிப்பு எழுத வேண்டும்.
பள்ளிகளின் செயல்பாடுகள் மாதம் ஒரு முறை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால்தான் குறைபாடுகள், முரண்பாடுகளை விவாதித்து தீர்வு காண முடியும். அதனால் ஒவ்வொரு மாதமும் புதன் கிழமை தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடக்கும். 2014-2015 கல்வி ஆண்டில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி ஒன்றே குறிக்கோளாக செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ப வாரம் இரு முறையாவது ஆசிரியர்களின் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் பார்வையிட்டு கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.