தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை ஒளிவு மறைவின்றி வெளியிட தேர்வாணையம் முடிவு
தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி
இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு
அதற்கான பணிகளை செய்து வருகிறது.
சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம் உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி ஆட்களை
தேர்வு செய்து வருகிறது. துணை கலெக்டர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டு,
வர்த்தக வரித்துறை உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை
உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு
எழுத்துத்தேர்வு நடத்தி வருகிறது.
தற்போது குரூப்–1 தேர்வு, குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு ஆகிய
தேர்வுகளின் முடிவு வெளியிடப்படாமல் உள்ளது. அவற்றை வெளியிடும் பணியில்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.
இந்த நிலையில் சில தேர்வுகளில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்
தெரியவில்லை என்றும், வெளிப்படையான முறை தேவை என்றும் பலர் தேர்வாணையத்தை
வலியுறுத்தி வந்தனர்.