தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு
போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு தேர்வு வைத்து பணி
நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை.
எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, இனிமேல் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்போதும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் சில வித ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடஒதுக்கீடு அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அதுபோல புதிதாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,000 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தேர்தல் முடிந்த பின்னர் வர உள்ளது.
இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.