Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Saturday, 29 March 2014

ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் - கடும் நடவடிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிகள், சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எப்.) இறுதி பணம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அரசு விதிமுறைகளின்படி ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஜி.பி.எப். இறுதி தொகை, ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட விவரங்களை உரிய ஆவணங்களுடன் மாநில கணக்காயருக்கு அனுப்பி ஓய்வுபெறும் நாளுக்கு மறுநாளே ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும். 

ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், தாமதம் ஆனதற்கு காரணமான பணியாளர்கள் அல்லது அலுவலர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு ஓய்வூதிய பலன்களின் தொகைக்கான வட்டி, அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 

எனவே, ஓய்வூதிய கருத்துருக்களை முழுமையான அளவில், ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே மாநில கணக்காயருக்கு அனுப்பி காலதாமதமின்றி ஓய்வூதிய பலன்களை ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பெற்று வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.